குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியது

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியது
Published on

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ். இவர், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ரா அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் இவர் மீது குற்றம் சாட்டியது.

இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றி விட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று இந்தியா கவலையும் தெரிவித்தது. இதனால், மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சர்வதேச கோர்ட்டு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.

இந்தியா தரப்பில் வியன்னா பிரகடனத்தை பாகிஸ்தான் மீறி இருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து உள்ளது. அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டது. பாகிஸ்தான் தரப்போ, வியன்னா பிரகடனத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதற்காக உளவு பார்ப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை அணுகுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இந்த விவகாரத்தை பொறுத்தவரை சர்வதேச கோர்ட்டை இந்தியா அரசியல் மேடையாக்கிவிட்டது என்று வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை தடை செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை முடிந்து, தீர்ப்பை சென்ற பிப்ரவரி மாதம் 22-ந்தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வெளியிடும் என தகவல் வெளியாகியது. இந்நிலையில் குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குல்பூஷண் ஜாதவிற்கு தூதரக உதவியை அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச நீதிமன்ற உத்தரவு காரணமாக இனி அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது. இதற்கிடையே தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com