பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த இம்ரான்கான் அழைப்பு

இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லாகூர்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து இம்ரான்கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளில் 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு அவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான்கான் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்த கொடுங்கோல் அரசுக்கு எதிராக 7ம் தேதி முதல் ஒட்டுமொத்த மக்களும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தொண்டர்களும் திரண்டு போராட வேண்டும். அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்வதற்குபதில் நான் இந்த இருட்டு சிறையிலேயே வாழ்ந்துகொள்வேன். சர்வாதிகாரி ஆட்சி செய்யும்போது அவர் தேர்தலை சந்திப்பதில்லை. கடுமையான ராணுவ பலம் கொடு அவர் ஆட்சி செய்துகொள்வார்' என பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரை சாடி இம்ரான்கான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






