

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. தற்போது அரசு பெரும்பான்மை இழந்துள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரசீத் இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறவரை பதவியில் நீடிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொள்வார். எனவே இம்ரான்கான் பிரதமராக தொடர்வார்.
நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பு வெற்றி பெற்ற பிறகு, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைக்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றி அரசியல் சாசனம் எதுவும் கூறவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை பொறுத்தமட்டில், அது வெளிநாட்டு சதி ஆகும். அதற்கு எதிர்க்கட்சிகள் உடந்தையாக உள்ளன. அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.