'பாகிஸ்தான் உள்நாட்டுப்போரை நோக்கி செல்லும்' - இம்ரான்கான் எச்சரிக்கை

தேர்தல் அறிவிக்காவிட்டால் பாகிஸ்தான் உள்நாட்டுப்போரை நோக்கி செல்லும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளார்.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

இஸ்லாமாபாத்,

கிரிக்கெட் நட்சத்திரமாக இருந்து அரசியல்களத்தில் குதித்து, பாகிஸ்தான் தெஹரிக் இ இன்சாப் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, பாகிஸ்தானின் பிரதமராக உயர்ந்தவர் இம்ரான்கான் (வயது 69). ஆனால் அந்த நாட்டில் எந்தவொரு பிரதமரும் முழுமையாக 5 ஆண்டு காலம் பதவியில் தொடர்ந்தது இல்லை என்ற வரலாறு, இம்ரான்கானுக்கும் சொந்தமானது.

அவருடைய ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர். இதனால் அந்த நாட்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற புதிய வரலாறு உருவானது.

அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியுமான ஷபாஸ் ஷெரீப், ஏப்ரல் மாதம் 11-ந் தேதி அந்த நாட்டின் புதிய பிரதமர் ஆனார்.

ஆனால் அங்கு நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை மூண்டு உயிரிழப்புகளும் நேரிட்டன. 6 நாளில் தேர்தல் தேதியை அறிவிக்காவிட்டால் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு மீண்டும் பேரணி நடத்தப்படும் என்று அவர் மிரட்டலும் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இம்ரான்கான், 'போல் நியூஸ்' செய்தித்தளத்துக்கு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு எதிர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான எங்கள் கட்சியின் வழக்கு மீது சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்காக காத்திருக்கிறோம். அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் நடத்த கோரி அடுத்த கட்ட பேரணி தேதி வெளியிடப்படும்.

சட்டம் மற்றும் அரசியல் சாசன வழிகளில் நாம் தேர்தலை சந்திக்க அவர்கள் அனுமதிக்கிறார்களா என பார்ப்போம். இல்லை என்றால் இந்த நாடு உள்நாட்டுப்போரை நோக்கி செல்லும்.

நான் நாடாளுமன்றத்துக்கு திரும்பும் பேச்சுக்கே இடம் இல்லை. ஏனென்றால் அது அரசை அகற்றிய சதியை ஏற்றுக்கொள்வதாக அமைந்து விடும்.

பாகிஸ்தான் அரசு சரியான முடிவுகள் எடுக்க வேண்டும். பாகிஸ்தான் அணுசக்தி தடுப்பை இழந்தால், நாடு மூன்று துண்டாகி விடும்" என்று அவர் கூறினார்.

இம்ரான்கானுக்கு பதிலடி கொடுத்து பிரதமர் ஷபாஸ் ஷெரீப் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், " நான் துருக்கியில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறபோது, இம்ரான்கான் நாட்டுக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுக்கிறார். அவர் அரசுப் பதவிக்கு தகுதியற்றவர் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் தேவைப்பட்டால், அவரது சமீபத்திய பேட்டி போதுமானது. உங்கள் அரசியலை செய்யுங்கள். ஆனால் எல்லைகளை மீறி பாகிஸ்தானைப் பிரிப்பது பற்றி பேசத்துணிய வேண்டாம்" என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com