எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்யும் யோசனையில் இம்ரான்கான் அரசு! பாகிஸ்தானில் பரபரப்பு

2000 கோடி பணம் கொடுத்து எதிர்க்கட்சியினர் பலர் ‘பலியாடுகள்’ போல அமெரிக்காவால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்று இம்ரான் கான் குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்யும் யோசனையில் இம்ரான்கான் அரசு! பாகிஸ்தானில் பரபரப்பு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் தான் அவருடைய கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்குமா, அவர் சட்டப்படி பிரதமராக தொடர்வாரா இல்லையா என்பது தெரியவரும்.

இது ஒருபுறம் இருக்க, மறுமுனையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி, ஏராளமான எதிர்க்கட்சித் தலைவர்களை பெருமளவில் கைது செய்யும் யோசனையை தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் ஜாவீத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

பெரும் எண்ணிக்கையிலான எதிர்க்கட்சித் தலைவர்களை வெகுஜனக் கைது செய்யும் யோசனை இன்னும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

பாக்கிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120 போன்றவற்றை தீவிரமாக அமல்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

இதை போல, ஆளுங்கட்சிக்கு எதிராக பல பத்திரிகையாளர்கள் பேசியுள்ளனர். தன்னை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான வெளிநாட்டு சதியில் அமெரிக்காவின் பங்கு உள்ளது என்று பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ள கருத்துக்கு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து பிரதமருக்கு அச்சுறுத்தல் இருந்தால், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு(ஓ ஐ சி) கூட்டத்தில், அமெரிக்காவை அழைத்தது ஏன் என்று ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தானுக்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தலை அமெரிக்கா தெரிவித்திருந்தால், மார்ச் 21 அன்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஓ ஐ சி வெளியுறவு மந்திரிகள் கவுன்சில் மாநாட்டிற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் உஸ்ரா ஜீயாவை ஏன் இம்ரான் கான் அழைத்தார்? என மூத்த தொகுப்பாளர் ஹமீத் மிர் கேள்வி எழுப்பினார்.

இன்று நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் இம்ரான் கான் பேசிய போது, 1500 கோடி, 2000 கோடி என பல கோடி பணம் கொடுத்து எதிர்க்கட்சியினர் பலர் பலியாடுகள் போல அமெரிக்காவால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்று பரபரப்பு குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com