ரஷியாவில் 75 அடி நீள ரெயில்வே பாலம் திருட்டு?

ரஷியாவில் 75 அடி நீள ரெயில்வே பாலம் ஒன்று திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷியாவில் 75 அடி நீள ரெயில்வே பாலம் திருட்டு?
Published on

மாஸ்கோ,

ரஷியாவில் 56 டன் எடை கொண்ட 75 அடி நீளம் உள்ள ரெயில்வே பாலம் காணாமல் போயிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அந்நாட்டின் முர்மன்ஸ்க் பகுதியில் உம்பா நதியின் மேல் அமைந்துள்ள இந்த ரெயில்வே பாலம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்திருப்பதால் இங்கு மக்கள் நடமாட்டம் பெரிய அளவில் இருக்காது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் இந்த பாலம் மாயமாக மறைந்ததாக அந்நாட்டின் சமூக வலைத்தளம் ஒன்றில் தகவல் பரவியது. ஆனால் இந்த சமூக வலைத்தளங்களில் வந்த படங்களில் காணாமல் போன பாலத்தின் சுவடுகள் இல்லை.

பாலம் கீழே விழுந்து உடைந்திருந்தால் அதன் இடிபாடுகள் இருக்க வேண்டும், ஆனால் சுத்தமாக பாலமே காணோம் என்பதுதான் தற்போது, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. உலோகத் திருடர்களால் இந்தப் பாலம் திருடப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் வாசிகள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில், ரெயில்வே பாலம் காணாமல் போனது தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உலோக பாகங்களை விற்பதற்காக மர்ம கும்பல் பாலத்தை உடைத்து திருடியிருக்கலாம் என கூறப்பட்டாலும், இவ்வளவு பெரிய பாலத்தை அந்த கும்பல் எப்படி திருடி கொண்டு சென்றிருக்க முடியும் என்பது புரியாத புதிராகவே இருப்பதால் போலீசார் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com