

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 25-ந் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அங்கு ஆட்சி அமைக்க 172 எம்.பி.க்கள் தேவை என்ற நிலையில் தேர்தலுக்கு பிறகு 9 சுயேச்சை எம்.பி.க்கள் இம்ரான்கான் கட்சியில் இணைந்தனர். இதனால் அக்கட்சியின் பலம் 125 ஆக உயர்ந்தது.
மேலும் பெண்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினருக் கான மொத்த ஒதுக்கீட்டில் (70 எம்.பி.க்கள்) இம்ரான்கான் கட்சிக்கு 28 இடங்கள் கிடைத்தன. இதையடுத்து சிறு சிறு கட்சிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவுடன் இம்ரான்கான் பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கிறார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 342 ஆகும்.
இந்த நிலையில் ஜனாதிபதி மம்னூன் ஹூசைன் உத்தரவின்பேரில் பொதுத் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று காலை 10 மணிக்கு கூடியது.
அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 329 பேர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இம்ரான்கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ, முன்னாள் தலைவர் ஆசிப் அலி சர்தாரி உள்ளிட்ட அனைத்து எம்.பி.க்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று பதவி பிரமாண உறுதிமொழியை வாசித்தனர். தற்போதைய சபாநாயகரான அயாஸ் சாதிக், அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க நாளை(புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. சபாநாயகர் தேர்தலில் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி, மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசாத் குவைசரை நிறுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சயத் குர்ஷித் ஷா போட்டியிடுகிறார்.
முக்கிய எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி, மஜ்லிஸ்- இ- அமால் கட்சி ஆகியவற்றுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 150 எம்.பி.க்கள் உள்ளனர். இதனால் சபாநாயகர் தேர்தல் இம்ரான்கானின் கூட்டணிக்கு கடும் சவாலாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமின்றி 18-ந்தேதி நடைபெறும் பிரதமர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) சார்பில் ஷாபாஸ் ஷெரீப்பை நிறுத்தி உள்ளன. இதுவும் இம்ரான்கானுக்கு பெரும் சவாலாக அமைந்து உள்ளது.
இதற்கிடையே இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்கும்போது அவருடைய மந்திரிசபையில் நியமிக்கப்பட இருக்கும் முக்கிய மந்திரிகளின் பெயர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்படும் இலாகாக்கள் பற்றிய விவரமும் வெளியாகி உள்ளது.
மந்திரிகளாக ஷா மஹ்மூத் குரேசி(வெளியுறவு), பர்வேஸ் கத்தாக்(உள்துறை), ஆசாத் உமர்(நிதி) ஆகியோரும் இம்ரான்கானின் ஆலோசகராக பிரபல தொழில் அதிபர் அப்துல் ரசாக் தாவூத்தும் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.