

ஆலோசனை
துபாய் நகரில் எக்ஸ்போ 2020 கண்காட்சி வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு (2022) மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. 6 மாத காலம் நடைபெற இருக்கும் இந்த கண்காட்சியானது மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க பகுதியில் நடைபெறும் முதலாவது எக்ஸ்போ கண்காட்சியாகும். இதனால் இந்த கண்காட்சியை சிறப்பான
வகையில் நடத்த அமீரக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி இதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், துபாய் அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான சுப்ரீம் கமிட்டியின் தலைவர் ஷேக் மன்சூர் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தலைமையிலான குழுவினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பாராட்டுகள்
அப்போது துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பேசியதாவது:-
துபாய் நகரில் கொரோனா பாதிப்பை கடந்து எக்ஸ்போ 2020 கண்காட்சி நடக்க இருக்கிறது. எனவே இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான சுப்ரீம் கமிட்டிக்கு அறிவுறுத்துகிறேன்.மேலும் துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதால்
இயல்பு நிலை திரும்ப உதவியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. அவர்களது பணிகளுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய வரலாறு படைப்போம்
கண்காட்சிக்கான பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினர் தங்களது பணிகளை இரட்டிப்பாக்க வேண்டும். இந்த குழுவினர் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் பணிகளை சிறப்புடன் செய்வர் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கிறது.இந்த இலக்கினை அடைய நாம் திறமையான குழுவினரை கொண்டுள்ளோம். எனவே பல்வேறு சவால்களை கடந்து இந்த கண்காட்சியை
சிறப்புடன் நடத்தி புதிய வரலாறு படைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது பட்டத்து இளவரசரிடம் துபாய் அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான சுப்ரீம் கமிட்டியின் உறுப்பினர்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்தனர். மேலும் துபாய் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்தும்
தெரிவித்தனர்