

நியூயார்க்,
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா பகுதியில் வசிப்பவர் பிஜி ஜார்ஜ். இவரது மனைவி பேபா பிஜி. இவர்களது மகன் டேவ் பிஜி (வயது 25), இந்திய வம்சாவளியை சேர்ந்த பிஜி ஜார்ஜின் சொந்த ஊர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முவாற்றுப்புழா பகுதி ஆகும். பிஜி ஜார்ஜின் குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. டேவ் பிஜி டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் டேவ் பிஜிக்கும். ஜெஸ்னி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஜெஸ்னி கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். நர்சாக பணியாற்றி வந்தார். டாவ்சன்வில் பகுதிக்கு அருகில் 'தி ரெவெர்' என்ற இடத்தில் அவர்களின் திருமண நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியின் போது மணமகன் டேவ் பிஜி பற்றி, அவரது தந்தை பிஜி ஜார்ஜ் பேசினார். அவர் கூறுகையில், 'எனது மகன் ஒரு அருமையான குழந்தை. அவன் எங்களுக்கு கடவுள் அளித்த பரிசு அவன் மிகவும் அழகானவன். இந்த திருமணம் எங்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு பொருத்தமான திருமணம் என்று சொல்லலாம். இதை விட வேறு எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்று பெருமைபட கூறினார். ஆனால் அவர் கூறிய சில மணி நேரங்களில் நிலைமை தலைகீழாக மாறியது.
புதுமண தம்பதியினர் விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் பீச்ட்ரீ-டிகால்ப் விமான நிலையத்திற்கு சென்று, பின்னர் அட்லாண்டா நகர மையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இரவில் தங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், வரவேற்பு நிகழ்ச்சி முடிவதற்குள் வானிலை மிகவும் மோசமாக மாறியது. விருந்து நிகழ்ச்சிகள் இரவு 9 மணிக்கு முடிவடைந்தது. அப்போது கடும் பனி மூட்டம் மற்றும் மழை காரணமாக பார்வை தெளிவு குறைவாக காணப்பட்டது. அனுபவம் வாய்ந்த விமானியான டேவ் பிஜி, இது போன்ற சூழ்நிலைகளில் விமானம் ஓட்டுவதும், அதில் செல்வதும் மிகவும் ஆபத்தானது என்று நினைத்தார். குறைவான பார்வைத்திறன் இருக்கும் போது நான் விமானத்தில் செல்லமாட்டேன், எனவே நாங்கள் யாருமே செல்லப் போவதில்லை என்று கூறினார். ஆனால் அந்த ஹெலிகாப்டரை இயக்க வந்திருந்த விமானி, அதிக உயரத்தில் பறந்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்று விடலாம் என்று மணமக்களை சமரசப்படுத்தினார்.
இதையடுத்து மணமக்கள் ஹெலிகாப்டரில் செல்ல முடிவு எடுத்தனர். அதன்படி ஹெலிகாப்டர் புறப்பட்டது. விமானி விமானத்தை ஓட்ட அதில் மணமக்கள் டேவ் பிஜி, ஜெஸ்னி பயணம் செய்தனர். அந்த ஹெலிகாப்டர் டாவ்சன்வில் பகுதிக்கு தென்மேற்கே உள்ள கரடு முரடான அடர்ந்த காடுகள் மற்றும் மலைகள் நிறைந்த பகுதியில் சென்று கொண்டிருத்தபோது மோசமான் வானிலை காரணமாக திடீரென்று விபத்தில் சிக்கியது. இதனால் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. மலையில் இருந்த மரக்கிளைக்குள் ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்கள் சிக்கிக் கொண்டன. இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர். அவர்கள் சம்பவ இடத்தை அடைய சுமார் 5 மணி நேரம் ஆனது. அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது மணமகன் டேவ் பிஜியும். விமானியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மணமகள் ஜெஸ்னி சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக ஹெலிகாப்டரின் பாகங்கள் மற்றும் மரக்கிளைகள் இடையே சிக்கி மயக்கம் அடைந்தபடி காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் திடீரென்று கண் விழித்தபோது மணமகன் டேவ்பிஜி அவரது மார்பில் சாய்ந்த நிலையில் கிடந்தார். மணமகள் ஜெஸ்னி நர்சு என்பதால் அவர் மணமகன் டேவ்பிஜியை தொட்டு அவரது நாடித்துடிப்பை பார்த்தார். அப்போது அவரது உயிர் பிரிந்திருப்பதை அறிந்து ஜெஸ்னி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த விபத்தில் ஜெஸ்னிக்கு பலத்த வெட்டுக்காயங்களும் சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டன. அவருக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து மீட்பு படையினர் அவரை மீட்டனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மணமகன் டேவ் பிஜியின் இழப்பால் அவர் மிகவும் மனம் உடைந்த நிலையில் உள்ளார்.