

சியோல்,
தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் உள்ள இம்ஜிங்காக் பூங்காவில் இந்திய போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போர் நினைவிடத்தை இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் தென்கொரியாவின் முன்னாள் படை வீரர்கள் நலத்துறை மந்திரி குவான் ஓ யூல் இணைந்து திறந்து வைத்தனர்.
கொரியப் போரின் 75-ம் ஆண்டு நினைவாகக் கட்டப்பட்ட இந்த நினைவிடம், போரின்போது இந்திய ராணுவத்தின் பாராஃபீல்டு ஆம்புலன்ஸ் மற்றும் இந்தியப் பாதுகாப்புப் படை ஆற்றிய வீரம், தியாகம் மற்றும் மனிதாபிமானச் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இரு நாட்டு மந்திரிகளும் இந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து தென்கொரிய மக்களால் மிகுந்த மரியாதையுடனும், நன்றியுடனும் தொடர்ந்து நினைவு கூரப்படும் துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
அப்போது பேசிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு இந்தியாவின் பங்களிப்பை எடுத்துரைத்தார். இருநாடுகளின் வரலாறும், தியாகங்களும், இந்தியா – தென்கொரியா சிறப்புமிக்க உத்திசார்ந்த கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளமாக தொடர்ந்து திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.