

ஈரான்,
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால், அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாகக் குற்றம்சாட்டி ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. உறுதிமொழிகளை மீறியதாகக் கூறப்படும் செயல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த மூடல் ஒரு "முதல் படி" என்றும், "தாக்குதல்" தொடர்ந்தால் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தங்களின் வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் மீறியதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும், ஹார்முஸ் நீரிணை 'மூடுவதும் திறப்பதுமாக' இருப்பதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலையற்ற சூழல் நீடிக்கிறது.
இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்ட நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையிலான தொழில்நுட்ப பேச்சுவார்த்தை நாளை சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதற்காக, அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோப், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் சுவிட்சர்லாந்துக்கு விரைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மருமகன் ஜெராட் குஷ்னருடன் தூதர் விட்கோப் சுவிட்சர்லாந்தில் இணையவுள்ளார்.
மத்திய கிழக்கில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இப்பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, லெபனான் அதிபர் ஜோசப் அவுனுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதம் ஏந்திய போராட்டத்தைக் கைவிட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.