பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்: ஈரான் கடும் கண்டனம்

பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்: ஈரான் கடும் கண்டனம்
Published on

தெஹ்ரான்,

ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஈரானில் 7 இடங்களில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 9 பேர் பலியானார்கள்.

தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் வம்சாவளி பயங்கரவாதிகள், ஈரானை பாதுகாப்பான புகலிடமாக பயன்படுத்தி வருகின்றனர். அப்பாவி பாகிஸ்தானியரை ரத்தம் சிந்த வைக்கின்றனர். அவர்களுக்கு எதிராக ஏராளமான தகவல்களை ஈரானிடம் அளித்தோம். ஆதாரங்களையும் அளித்தோம். ஆனால், ஈரான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அந்த பயங்கரவாதிகள், பாகிஸ்தானுக்கு எதிரான நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.

எனவே, இந்த தாக்குதல் நடவடிக்கையை எடுப்பதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. அப்பாவி ஈரான் மக்களையோ, ஈரான் ராணுவத்தினரையோ குறிவைக்கவில்லை.

தனது தேச பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை காக்க எத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கும் பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது. இனிமேலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிக்கல் நிறைந்த இத்தாக்குதல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதன் மூலம் பாகிஸ்தான் படைகளின் திறமை வெளிப்பட்டுள்ளது. ஈரான் எங்கள் சகோதர நாடு. அதன் மக்கள் மீது பாகிஸ்தான் மக்கள் மிகுந்த மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரு நாடுகளின் எல்லையில் உள்ள ஈரானியர் அல்லாத கிராமவாசிகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலுக்கு "சமநிலையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இரு நாடுகளுக்கு இடையே "நல்ல அண்டை நாடு மற்றும் சகோதரத்துவம்" என்ற கொள்கையை கடைபிடிப்பதாகவும், தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான உறவுகளை எதிரிகள் சிதைக்க அனுமதிக்காது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர், தற்போது ஈரானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி செல்ல மாட்டார் என்று ஈரான் அறிவித்துள்ளது. தாக்குதல் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை, செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் என அந்த பிராந்தியம் ஏற்கனவே பதற்றத்தில் இருக்கிறது. தற்போது, பாகிஸ்தான்-ஈரான் இடையிலான மோதலால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com