

அமெரிக்கா–ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இரு நாடுகளும் இரண்டாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை. நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானில் கடந்த 11-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு, ஈரான் கப்பல்களை தடுத்து வருகிறது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஈரான், ஹோர்முஸ் ஜலசந்தியில் தனது கட்டுப்பாட்டை அதிகப்படுத்தியுள்ளது. அதன் படி, வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் நெருக்கடி அளித்து வருகிறது.
அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகை நடவடிக்கை நீடிக்கும்வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று ஈரான் தெரிவித்திருந்தது. இதனால் அமெரிக்க குழு தனது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தது. இதற்கிடையே அமெரிக்கா–ஈரான் இடையே இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் முயற்சித்தது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று முன்பு தெரிவித்த ஈரான், தற்போது அதிலிருந்து மாற்றம் காட்டியுள்ளது. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டது. இஸ்லாமாபாத்தை சென்றடைந்த அவரை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், அப்பாஸ் அராக்சியுடன் இஷாக் தார், ஆசிம் முனீர் உள்ளிட்ட பாகிஸ்தான் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாவது:-
இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்படவில்லை. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே எந்த சந்திப்பும் நடைபெறாது. அதற்கு பதிலாக, இரு நாடுகளின் தூதுக் குழுக்களுக்கு இடையே பாகிஸ்தான் அதிகாரிகள் செய்திகளை பரிமாறிக் கொள்வார்கள்.
தற்போது நடைபெற்று வரும் மத்தியஸ்த முயற்சிகளின் ஒரு பகுதியாக அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா திணித்த ஆக்கிரமிப்புப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தொடர்ச்சியான மத்தியஸ்தம் மற்றும் நல்லெண்ண முயற்சிகளுக்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் அராக்சி எந்தவிதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட மாட்டார் என்றும், இந்தப் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரலாம் என்பது குறித்த ஈரானின் கருத்துக்களை தெரிவிப்பதற்காகவே இந்த பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.