

டெல் அவிவ்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர். தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பலியாகி உள்ளனர்.
இதேபோன்று, ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இதில், 2025-ம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எனப்படும் ஈரானிய படையின் பொறுப்பை பாக்பூர் ஏற்றுக்கொண்டார். அதற்கு முன்பு தளபதியாக இருந்த உசைன் சலாமி மரணம் அடைந்த நிலையில், பாக்பூர் அந்த பதவியை வகித்து வந்து உள்ளார். இந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சி படை எனப்படும் ஈரான் ராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி ஈரான் ஊடகங்கள் வெளியிட்டு உள்ள தகவலில், ஜெனரல் அகமது வாஹிதி ஈரான் படைக்கான புதிய தளபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிகின்றது.
பியூனஸ் அயர்ஸ் நகரில் 1994-ம் ஆண்டு நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 84 பேர் பலியான சம்பவத்துடன் தொடர்புடைய இவரை 2007-ம் ஆண்டு முதல் இன்டர்போல் தேடி வருகிறது. 2025-ம் ஆண்டு அக்டோபரில் ஈரான் ராணுவத்தின் துணை தளபதியாக நியமிக்கப்பட்ட வாஹிதி, கடந்த காலத்தில் ஈரானின் பாதுகாப்பு மற்றும் உள்துறை மந்திரி பதவியை வகித்தவர் ஆவார்.