

ஜெனீவா
ஈரானின் மீது கடந்த ஆண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. பதிலுக்கு கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது சிறிய தாக்குதலை நடத்தி, ஈரான் எச்சரித்தது. எனினும், எப்போது வேண்டுமென்றாலும் நேரடி போர் ஏற்படலாம் என்ற சூழல் காணப்படுகிறது.
ஈரான் நாட்டின் அணு ஆயுத தயாரிப்பு, பயன்பாட்டுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனை தவிர்ப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொள்ள அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால், ஈரான் அதற்கு உடன்பட மறுக்கிறது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை, ஜெனீவாவில் இன்று நடைபெறுகிறது.
கடந்த 2 முறை நடந்த உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளில் உரிய பலன் ஏற்படாத சூழல் உள்ளது. இந்நிலையில், 3-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஈரான் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, ஜெனீவா நகருக்கு இன்று வருகை தந்துள்ளார்.
இதேபோன்று அமெரிக்கா சார்பில் தூதர் ஸ்டீவ் விட்காப், டிரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர் ஆகியோர் வருகை தந்திருக்கின்றனர். விட்காப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஈரானின் அணு ஆயுத நடவடிக்கை தொடர்பான எந்த ஒப்பந்தமும் நிரந்தர அடிப்படையில் இருக்கும் என வலியுறுத்தினார்.
ஒப்பந்தத்திற்கு ஈரான் முன் வரவில்லையெனில், ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் நிர்வாகம் எச்சரித்து வருகிறது. அதற்கேற்ப, அமெரிக்கா தன்னுடைய படைகளை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இடம் மாற்றியது. அது ஈரான் மீது தாக்குதல் நடத்த வசதியாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
இதன்படி, கத்தார் நாட்டின் அல் உதீத் படை தளத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்களை இடம் மாற்றி கொண்டு சென்றுள்ளது. இதனை அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதேபோன்று, அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள பஹ்ரைன், ஈராக், சிரியா, குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளிலும் கூட ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுதங்களின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.
அவர்கள் எல்லோரும் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். ஒருவேளை போர் ஏற்பட்டால் இந்த 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஈரானின் தாக்குதலுக்கு இலக்காக கூடும் என கூறப்படுகிறது. அதனை தவிர்க்கவே இந்நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
அதனுடன் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அமெரிக்கா மாற்றி உள்ளது என கூறப்படுகிறது. அதனுடன் ஈரானின் நேரடி தாக்குதலில் இருந்து தப்பும் வகையில், ஈரானில் இருந்து சற்று தொலைவில் அமெரிக்காவின் 2 விமானந்தாங்கி கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இவற்றை எல்லாம் கவனித்து வரும் ஈரானும், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதிலடி தர தயாராகவே உள்ளது. அதற்கேற்ப அதன் தலைவர் காமேனி சமீபத்தில் கூட டிரம்ப்புக்கு நேரடியாக எச்சரிக்கை விடும் வகையில் பேசினார்.
எனினும், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ கூறும்போது தூதரக பேச்சுவார்த்தையில் நல்ல பலன் வரும் என டிரம்ப் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளார் என்று கூறினார்.