ஈரான் சிறைபிடித்த இங்கிலாந்து கப்பலில் சென்ற 23 மாலுமிகளில் 18 பேர் இந்தியர்கள் - பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை

ஈரான் சிறை பிடித்துள்ள இங்கிலாந்து எண்ணெய் கப்பலில் பயணம் செய்த மாலுமிகளில் 18 பேர் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஈரான் சிறைபிடித்த இங்கிலாந்து கப்பலில் சென்ற 23 மாலுமிகளில் 18 பேர் இந்தியர்கள் - பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை
Published on

லண்டன்,

சுவீடன் நாட்டின் ஸ்டீனா பல்க் என்ற கம்பெனிக்கு சொந்தமானது, ஸ்டீனா இம்பெரோ எண்ணெய் கப்பல்.

இந்த கப்பல் இங்கிலாந்து கொடி ஏந்தி சென்று கொண்டிருந்தபோது, பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் சிறை பிடித்துள்ளது.

தங்கள் நாட்டின் மீன்பிடி படகுடன் மோதியதால்தான் இந்த கப்பலை சட்டப்படி பிடித்து வைத்துள்ளதாக ஹோர்மோஸ்கான் துறைமுக தலைமை இயக்குனர் அல்லா மொராத் அபிபிபூர் கூறி உள்ளார்.

இருப்பினும் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிற நிலையில், இந்த கப்பலை ஈரான் சிறை பிடித்திருப்பது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

இந்த கப்பலில் 23 மாலுமிகள் பயணம் செய்தனர். அவர்களில் கேப்டன் உள்ளிட்ட 18 பேர் இந்தியர்கள் ஆவர். மற்றவர்கள் ரஷியா, லாத்வியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதை உறுதிசெய்த கப்பல் கம்பெனியின் தலைவர் எரிக் ஹானல், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் சுவீடன் அரசுகளை தொடர்பு கொண்டு வருகிறோம். நாங்கள் மாலுமிகளின் குடும்பங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். மாலுமிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அவர்கள் பாதுகாப்பிலும், நலனிலும் கவனம் செலுத்துகிறோம் என்று கூறினார்.

இதற்கிடையே ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள கப்பலில் சென்றுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் டெல்லியில் நேற்று கூறும்போது, இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்து வருகிறோம். அங்கு சிக்கியுள்ள நமது மாலுமிகளை கூடிய விரைவில் பத்திரமாக மீட்கவும், இங்கு கொண்டு வந்து சேர்க்கவும் ஈரான் அரசுடன் அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது என குறிப்பிட்டார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தை இங்கிலாந்து கடுமையாக எடுத்துக்கொண்டுள்ளது.

இது குறித்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜெரேமி ஹண்ட் கருத்து தெரிவிக்கையில், ஸ்டீனா இம்பெரோ எண்ணெய் கப்பலை ஈரான் பிடித்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கப்பல்கள் சுதந்திரமாக சென்று வருவது பராமரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்

மேலும், சட்டவிரோதமான, நிலைத்தன்மையற்ற நடத்தையால் ஈரான் ஆபத்தான பாதையை தேர்வு செய்கிறது என கருதுகிறோம். இந்த பிரச்சினையில் விரைவான தீர்வு காணப்படாவிட்டால், கடும் விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com