3 ஊழல் வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க கோரிய நவாஸ் ஷெரீப்பின் மனு தள்ளுபடி

3 ஊழல் வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க கோரிய நவாஸ் ஷெரீப்பின் மனுவை இஸ்லமாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
3 ஊழல் வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க கோரிய நவாஸ் ஷெரீப்பின் மனு தள்ளுபடி
Published on

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நவாஸ் ஷெரீப், தனக்கு எதிரான மூன்று ஊழல் வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க கோரிய மனுவை இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் 1990களில் இரு முறை பிரதமராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்து, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக பனாமா ஆவணங்கள் கூறின. பனாமா கேட் ஊழல் என்று அழைக்கப்பட்ட இந்த ஊழலில் நவாஸ் ஷெரீப் பதவியை பறிக்குமாறு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து கடந்த ஜூலை மாதம் 28ந் தேதி அதிரடியாக உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் பிரதமர் பதவியை விட்டு விலகினார்.மேலும், நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் ஓய்வு பெற்ற கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை அமைப்பு ஊழல் வழக்குகள் தொடுத்து, அந்த வழக்குகளின் விசாரணையை பொறுப்புடைமை கோர்ட்டு 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறியது.

அதைத் தொடர்ந்து அவர்கள் மீது 3 ஊழல் வழக்குகள், இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், தனக்கு எதிராக தனித்தனியாக விசாரிக்கப்படும் 3 ஊழல் வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் கோரிக்கை விடுத்தார். இஸ்லமாபாத் ஐகோர்ட்டில் இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நவாஸ் ஷெரீப்பின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, தேசிய பொறுப்புடமை கோர்ட்டும் நவாஸ் ஷெரீப்பின் மேற்கண்ட கோரிக்கையை தள்ளுபடி செய்து இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com