இஸ்ரேல் தேர்தலில் புதிய சாதனை; 1981-க்குப் பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் நவ.4-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1981-க்குப் பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு
Published on: 

ஜெருசலேம்,

நெசெட்' என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் 73 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன.

விறு விறு வாக்குப்பதிவு

இஸ்ரேல் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இரவு 10 மணி வரை (இந்திய நேரப்படி நள்ளிரவு 1:30 மணி) நடைபெறும். நாடு முழுவதும் 12,018 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் ஹேக்கிங் காரணமாக, இஸ்ரேல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை. இன்னும் பாரம்பரிய வாக்குச்சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது.

இந்தநிலையில், மத்திய தேர்தல் குழுவை மேற்கோள் காட்டி, இஸ்ரேலிய ஊடகங்கள், மாலை 4 மணி (14:00 GMT) நிலவரப்படி வாக்கு பதிவு 55.7 சதவீதத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றன.

2022 தேர்தலில் இதே நேரத்தில் 47.5 சதவீதமாக இருந்தது. இதுவரை 4,085,075 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மத்திய தேர்தல் குழுவின் தலைவர் டான் லிவ்னே கூறினார்.

1981-க்குப் பிறகு அதிகபட்சம்

காலை 10 மணி நிலவரத்தில் பதிவான வாக்குப்பதிவு, 1981-ஆம் ஆண்டுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ள அதிகபட்ச அளவாகும். அந்த ஆண்டில் மெனகெம் பெகின் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் எந்தொரு தனி வேட்பாளருக்கும் மக்கள் வாக்களிப்பதில்லை. மாறாக, அவர்களுக்குப் பிடித்த அரசியல் கட்சியின் ஒட்டுமொத்த வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களிப்பார்கள். இதில், ஒரு கட்சி பெறும் வாக்குச் சதவீதத்தின் அடிப்படையில் அதற்கு நாடாளுமன்ற இடங்கள் அதாவது விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒதுக்கப்படும்.

120இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற 61 இடங்களை கைப்பற்ற வேண்டும். தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன் கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலில் நடக்கும் நாடாளுமன்ற டேர்டலில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. கருத்துக்கணிப்புகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் 1996 முதல் 2022 வரை சராசரியாக 2.4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் நடந்து வந்தது. ஆனால், தற்போதைய 25-வது நாடாளுமன்றம் 1988-ம் ஆண்டிற்குப் பிறகு கலைக்கப்படாமல் தனது முழு 4 ஆண்டு காலத்தையும் நிறைவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்?

இன்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் (உள்ளூர் நேரம் இரவு 10 மணிக்கு) இஸ்ரேலிய ஊடகங்கள் முதற்கட்டக் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடும்.

அக்டோபர் 30 அன்று தபால் வாக்குகள் மற்றும் தூதரக வாக்குகளை எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நவம்பர் 4 அன்று இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு அதிகாரப்பூர்வமான இறுதி தேர்தல் முடிவுகளை வெளியிடும்.

இதன் பின்னரே, புதிய பிரதமர் யார்? கூட்டணி ஆட்சி யாரால் அமைக்கப்படும்? என்பதற்கான அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com