காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி

அனைத்து பணய கைதிகளும் திரும்பும் வரை போர் தொடரும் என பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
காசா சிட்டி,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. 251 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது.
21 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், காசா பகுதியில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல் நேற்றிரவு நடந்ததுடன் இன்றும் தொடர்ந்தது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 28 பேர் பலியானார்கள். இதனால், 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
ஹமாஸ் அமைப்பு நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், தன்னிடமுள்ள 48 பணய கைதிகளை திருப்பி அனுப்ப தயாராக இருக்கிறோம் என தெரிவித்தது. அவர்களில் 20 பேர் உயிருடன் இருப்பார்கள் என இஸ்ரேலால் நம்பப்படுகிறது. இதற்கு ஈடாக பணய கைதிகளை விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டது. அனைத்து பணய கைதிகளும் திரும்பும் வரை போர் தொடரும் என தெரிவித்து உள்ளது.






