மின்சாரம் இன்றி திணறும் காசா மருத்துவமனைகள்.. ஊசலாடும் மனித உயிர்கள்

மருத்துவமனைகளில் உள்ள உயிர் காக்கும் இயந்திரங்களின் பீப் ஒலியானது, பல நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருப்பதை நினைவூட்டுகிறது.
மின்சாரம் இன்றி திணறும் காசா மருத்துவமனைகள்.. ஊசலாடும் மனித உயிர்கள்
Published on

காசாவை முற்றுகையிட்டு இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன. எங்கு பார்த்தாலும் அழுகுரல் கேட்டவண்ணம் உள்ளது.

இது ஒருபுறமிருக்க, காசாவுக்கான குடிநீர் விநியோகம், உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இஸ்ரேல் நிறுத்தி விட்டது. எரிபொருள் கொண்டு செல்வதையும் அனுமதிக்கவில்லை. இதனால் காசா நிலைகுலைந்துள்ளது.

காசாவில் இருந்த ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையத்திலும் எரிபொருள் தீர்ந்துபோனதால் நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் காசாவில் கடும் மின்தடை ஏற்பட்டது. பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கிவிட்டன. மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சப்ளை வழங்கப்படுகிறது. அதற்கான எரிபொருளும் குறைந்த அளவே கையிருப்பு உள்ளது. எனவே, விரைவில் மின்சப்ளை முழுவதுமாக துண்டிக்கப்படலாம்.

மருத்துவமனைகளில் உள்ள உயிர் காக்கும் இயந்திரங்களின் பீப் ஒலியானது, பல நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருப்பதை நினைவூட்டுகிறது. இந்த இயந்திரங்கள், எந்த நேரத்திலும் தனது இயக்கத்தை நிறுத்தலாம். அத்தகைய நிலை ஏற்பட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும்.

மருத்துவமனைகளுக்கு வரும் மருத்துவ பொருட்களின் சப்ளையும் குறைந்ததால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாலாபுறமும் ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில், யாராவது நம்மை பாதுகாக்க மாட்டார்களா? என்ற ஏக்கத்துடன் உயிரை கையில் பிடித்தபடி பரிதவிக்கிறார்கள் காசா மக்கள்.

இஸ்ரேல் தனது முற்றுகையை நீக்கி மக்களுக்கு மிகவும் தேவைப்படும் எரிபொருள் கிடைப்பதை அனுமதிக்க வேண்டும் என காசா மின் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com