‘இஸ்ரேல் தேர்தலில் நாங்கள் தலையிட்டதாக கூறுவது அபத்தமானது’ - நெதன்யாகு குற்றச்சாட்டுக்கு கத்தார் அரசு பதில்

இஸ்ரேல் நாட்டின் அரசியல் அல்லது தேர்தலில் எந்த வகையிலும் தலையிடவில்லை என கத்தார் கூறியுள்ளது.
‘இஸ்ரேல் தேர்தலில் நாங்கள் தலையிட்டதாக கூறுவது அபத்தமானது’ - நெதன்யாகு குற்றச்சாட்டுக்கு கத்தார் அரசு பதில்
Published on: 

தோகா,

இஸ்ரேல் அரசியல்வாதிகள் கூறி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்

‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3 லட்சம் வாக்காளர்களில், சுமார் 56.9 லட்சம் பேர்(77.7 சதவீதம்) பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேலில் உள்ள அரபு குடிமக்கள் அதிக அளவில் வாக்கு செலுத்தியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

நெதன்யாகு அணிக்கு 53 இடங்களும், ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி அணிக்கு 48 இடங்களும் கிடைத்துள்ளதாக இஸ்ரேல் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே தேர்தலில் போட்டியிட்ட அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையாததால் இந்த எண்ணிக்கைகள் மாறலாம் என்று கூறப்படுகிறது.

பெரும்பான்மை கிடைக்கவில்லை

இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் பல வாரங்களுக்கு நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி அரசு அமையாவிட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம்

இந்த நிலையில், இஸ்ரேல் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அரபு கட்சிகள் இஸ்ரேல் தேர்தல்களைத் திருடிவிட்டார்கள். அரபு கட்சிகளுக்கு ஆதரவாக சில வெளிநாட்டு அமைப்புகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர்.

இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். இஸ்ரேல் நாடாளுமன்றத்தை வெளிநாட்டினர் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். இஸ்ரேலை இஸ்லாமிய மயமாக்கி, வலதுசாரி ஆட்சியை வீழ்த்துவதோடு, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையை(IDF) அனைத்துத் தளங்களிலும், குறிப்பாக ஈரானில் தோல்வி அடைய வைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

கத்தார் தலையீடு குறித்து விசாரணை

மேலும் இஸ்ரேல் தேர்தலில் கத்தார் நாட்டின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து இஸ்ரேல் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளது.

கத்தார் மறுப்பு

இந்நிலையில், நெதன்யாகுவின் குற்றச்சாட்டுகளுக்கு கத்தார் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கத்தார் அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மஜித் அல் அன்சாரி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“இஸ்ரேல் தேர்தலில் கத்தாரின் தலையீடு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். இஸ்ரேல் அரசியலுக்குள் கத்தாரை இழுக்கும் வகையில் அந்நாட்டின் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கூறி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்.

முன்னதாக கத்தார் அரசு பெஞ்சமின் நெதன்யாகுவை வாங்கிவிட்டது என்று குற்றம்சாட்டினார்கள். பின்னர் இஸ்ரேலில் உள்ள இடதுசாரிகளை கத்தார் வாங்கிவிட்டது என்றார்கள். தற்போது இந்த குற்றச்சாட்டை கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதை நம்புவதாக இருந்தால், கத்தார் இதற்குள் ஒட்டுமொத்த இஸ்ரேலையும் வாங்கியிருக்க வேண்டும்.

அபத்தமானது, ஆபத்தானது

இஸ்ரேல் தேர்தலில் கத்தார் தலையிட்டதாக கூறுவது அபத்தமான மற்றும் ஆபத்தான குற்றச்சாட்டு. சில இஸ்ரேலிய அரசியல்வாதிகளின் தோல்விகளை மறைப்பதற்காக கத்தாரை பயன்படுத்தக் கூடாது. கத்தார் மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக தங்கள் சொந்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றியும், அந்த பிராந்தியத்தில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களை சரிசெய்வது பற்றியும் இஸ்ரேல் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும்.

நாங்கள் தலையிடவில்லை

இஸ்ரேல் நாட்டின் அரசியல் அல்லது தேர்தலில் கத்தார் எந்த வகையிலும் தலையிடவில்லை. இஸ்ரேலின் உள்விவகாரங்களில் கத்தார் அரசை இழுப்பதை நங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மேலும், இது போன்ற குற்றச்சாட்டுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான எங்கள் நிலைப்பாட்டையும், எங்களது மனிதாபிமான மற்றும் தூதரக உதவிகளையும், போர்நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்யும் பணியையும் ஒருபோதும் பாதிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X