பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம்

பாகிஸ்தானில் ஊடக மேம்பாட்டு ஆணையம் அமைப்பதற்கு பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் ஊடக மேம்பாட்டு ஆணையம்(பி எம் டி ஏ) அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டால், அனைத்து அதிகாரங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும் அபாயம் உள்ளது. அவர்கள் ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு உள்ளது என்று சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (ஐ எப் ஜே) தெரிவித்துள்ளது.

இந்த முடிவை மார்ற வேண்டும் என்று ஊடகங்களை சார்ந்த பலர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பாகிஸ்தான் ஊடக மேம்பாட்டு ஆணையம்(பி எம் டி ஏ) அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஆணையம், ஊடகத் துறையின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ள நடைமுறைகளை எளிமையாக்கவும், தவறான செய்திகளை தடுப்பதற்காகவும் இந்த ஆணையம் அமைக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் தற்போது உள்ள ஊடக ஒழுங்குமுறை அமைப்புகளை மாற்றிவிடும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு களத்திலும் உள்ள திரைப்படங்கள், மின்னணு, அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை மேற்பார்வை செய்யும் அதிகாரமும் உள்ளது.

ஊடகத் தீர்ப்பாயத்திற்கான உறுப்பினர்களை அந்த ஆணையமே முடிவு செய்யும், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கவும், 25 லட்சம் பாகிஸ்தானிய ரூபாய் தொகையை அபராதமாக விதிக்கவும் இந்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊடகத் தீர்ப்பாயங்களால் எடுக்கப்படும் முடிவுகள் சுப்ரீம் கோர்ட்டில் மட்டுமே முறையீடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம்(வேன் - இப்ரா), சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம்(ஐ பி ஏ) மற்றும் ஐ எப் ஜே போன்ற அமைப்புகள் புதிய ஆணையம் அமைவதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்துள்ளன.

இத்தகைய முடிவுகளை எடுக்கும் முன் பாகிஸ்தான் அரசு ஊடக பிரதிநிதிகளிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். இந்த அமைப்புக்கு பத்திரிக்கை சுதந்திரத்தை மீறுவதற்கான அதீத அதிகாரம் வழங்கப்படுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று சர்வதேச ஊடக அமைப்புகளான வேன் - இப்ராவின் முதன்மை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசின் இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நெருக்கடியை பயன்படுத்தி ஊடகத் துறையை முடக்குவதற்கான முயற்சி நடக்கிறது என்று ஐ பி ஏ அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரத்தை குறைக்க செய்யும் இத்தகைய நடவடிக்கைகளை விட்டுவிட்டு வருங்காலத்தில் சுதந்திரமான ஊடகத் துறை அமைய தேவைப்படும் அத்தியாவசிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ எப் ஜே அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com