

இஸ்லாமாபாத்,
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்கான்டினென்டல் ஓட்டலில் 20-ம் தேதி இரவு ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் நுழைந்து அங்கிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர், இதில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்தும் காபூல் நகரில் ஆம்புலன்ஸ் தாக்குதல் மற்றும் ராணுவ அகாடமி தாக்குதல் என பயங்கரவாதிகள் தரப்பில் கொலைவெறித் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகள் பாதுகாப்பு வளையத்தை தாண்டி சென்று தாக்குதலை முன்னெடுத்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வோர்க் பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என கூறி அந்நாட்டிற்கான உதவிகளை அமெரிக்கா ஏற்கனவே நிறுத்திவிட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்த தாக்குதலை முன்னெடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் பயங்கரவாத போரில் ஏற்பட்டு உள்ள தோல்வியில் எங்களை குற்றம் சாட்டாதீர்கள் என பாகிஸ்தான் கூறி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தான் ஓட்டலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. பயிற்சி அளித்து உள்ளது என மூத்த ஆப்கானிஸ்தான் தூதர் குற்றம் சாட்டிஉள்ளார்.
ஐ.நா.விற்கான ஆப்கானிஸ்தான் நாட்டின் நிரந்தர பிரதிநிதி முகமுத் சாய்கல், பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.க்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். காபூல் இன்டர்கான்டினென்டல் ஓட்டலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனது தந்தைதான் அப்துல் காதர். அப்துல் காதர் தன்னுடைய மகனுக்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சிறப்பு பயிற்சி பாகிஸ்தானின் உளவுத்துறையால் அளிக்கப்பட்டு உள்ளது, அப்துல் காதர் இப்போது ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையின் காவலில் உள்ளார், என முகமுத் சாய்கல் தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.
ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள மதரஸாவில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் பார்க்கும் விதமான கண்ணாடி பாகிஸ்தானின் ராணுவத்திற்கு வாங்கப்பட்டது. இதுபோன்ற கண்ணாடிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது கிடையாது. பாகிஸ்தான் ராணுவம் பிரிட்டீஷ் நிறுவனத்திடம் இருந்து வாங்கி உள்ளது. கண்ணாடிகளை காஷ்மீரில் உள்ள லஷ்கர் பயங்கரவாதிகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை வழங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் ஓட்டல் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் பங்கு உள்ளது என கூறிஉள்ளார் முகமுத் சாய்கல்.