

லாகூர்,
2008 மும்பை தாக்குதல் சூத்திரதாரியான பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை கைது செய்வதற்கு அந்நாட்டு அரசுக்கு லாகூர் ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.
மும்பை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா. சபை அறிவித்து உள்ளது. அவனது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலை வைத்து உள்ளது. பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த உதவியை அமெரிக்கா நிறுத்திவிட்டது.
இதனையடுத்து 72 தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி வழங்க கூடாது என பாகிஸ்தான் அரசு பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட்டது. இதில் ஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத இயக்கங்களும் இடம்பெற்று இருந்தது.
ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடன் தொடர்புடைய பிற இயக்கங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்துவரும் நிலையில் ஐ.நா.வின் பொருளாதார தடை குழுவின் கண்காணிப்பு பிரிவு பாகிஸ்தான் செல்கிறது.
ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்பு ஏற்கனவே ஐ.நா.வின் தடை பட்டியலில் உள்ளது. ஆனால் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை அணுக ஐ.நா. பொருளாதார தடை குழுவை அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் கூறிஉள்ளது.
ஐ.நா. பொருளாதார தடை குழு கண்காணிப்பு குழு பாகிஸ்தான் வரும் நிலையில் ஹபீஸ் சயீத் லாகூர் ஐகோர்ட்டை நாடி உள்ளான். பாகிஸ்தான் அரசு தன்னை கைது செய்வதற்கும், ஜமாத்-உத்-தவா மற்றும் பலா-இ-இன்சானியத் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தான். அமெரிக்கா மற்றும் இந்தியாவின் சார்பில் பாகிஸ்தான் என்னை கைது செய்ய விரும்புகிறது, இருநாடுகளும் எனக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு உள்ளது என நிரூபிக்க எப்படியெல்லாம் முயற்சி செய்ய முடியுமோ, அப்படியெல்லாம் முயற்சி செய்கிறது என ஹபீஸ் சயீத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட உத்தரவை பிறப்பிக்கும் வரையில் ஹபீஸ் சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட்டது. அரசு இவ்விவகாரம் தொடர்பாக மார்ச் 17-ம் தேதி பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.