லாவோசில் விஷச்சாராயத்துக்கு பலியான சுற்றுலா பயணிகள்.. மதுபான விடுதி உரிமையாளரிடம் விசாரணை

லாவோஸ் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க அரசு, தனது நாட்டு மக்களுக்கு சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது.
லாவோசில் விஷச்சாராயத்துக்கு பலியான சுற்றுலா பயணிகள்.. மதுபான விடுதி உரிமையாளரிடம் விசாரணை
Published on

வியன்டியான்,

தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ், சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றி பார்க்க வருகிறார்கள். கடுமையான சட்டங்களுக்கு அப்பாற்பட்டதாக லாவோஸ் உள்ளது. இதனால் மதுபோதை விருந்துகள் நடத்த சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைநகர் வியன்டியான் அருகே உள்ள வாங் வியங் நகரில் உள்ள பிரபல இரவு நேர மதுபான விடுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, வெளிநாட்டினர் உள்பட பலர் மது குடித்தபடி பொழுதை போக்கி கொண்டிருந்தனர்.

அப்போது வாயில் திடீரென நுரை தள்ளியபடி பலர் மயங்கி விழுந்தனர். உயிருக்கு போராடிய 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவர்கள் குடித்த மதுவில் விஷத்தன்மை இருந்தது தெரிந்தது.

தகவலறிந்த போலீசார் விஷச்சாராயம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்தவர்களை மீட்டு தாய்லாந்துக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனளிக்காமல் அமெரிக்காவை சேர்ந்த ஒரு வாலிபர், டென்மார்க் நாட்டை சேர்ந்த இருவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவர், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் என வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் லாவோஸ் நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட மதுபான விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரும் விசாரணை வளையத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. விசாரணைக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாவோஸ் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க அரசு, தனது நாட்டு மக்களுக்கு சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது. லாவோஸ் செல்லும் அமெரிக்கர்கள் அங்கு மெத்தனால் கலந்த மதுவை குடிக்க நேரிடலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கூறி உள்ளது. இதேபோல் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் நாடுகளும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன.

ஒரு சில பார்களில் எத்தனாலுக்கு பதிலாக மலிவான விலையில் கிடைக்கும் மெத்தனாலை மது பானங்களில் கலந்து விற்பனை செய்கிறார்கள். இவ்வாறு சேர்ப்பதில் சில சமயம் கடுமையான விஷத்தன்மை காரணமாக மரணத்தை ஏற்படுத்திவிடுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com