

மாஸ்கோ,
உக்ரைன் அதிபர் வொளாடிமிர் ஜெலென்ஸ்கி ரஷியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே மோதலை தூண்ட முயற்சிக்கிறார் என்று
ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
'எனக்கு ஒரு கேள்வி உள்ளது. ஜெலன்ஸ்கி நம்பியது போல் நேட்டோ அவருக்கு ஆதரவாக நிற்காதது குறித்து அவர் வருத்தப்பட்டார் எனில், அதற்கு நேட்டோ இந்த பிரச்சனையை புறக்கணிப்பதை தவிர்த்து இதில் ஈடுபடுவதன் மூலமே இந்த மோதலைத் தீர்க்க முடியும் என்று அவர் நம்பியிருக்கிறார் என்று அர்த்தம்.
இதன் மூலம் நேட்டோ இந்த பிரச்சனையில் தலையிடப் போவதில்லை என்று வாஷிங்டன், பாரிஸ், பெர்லின் மற்றும் பிற தலைநகரங்களில் இருந்து வரும் தொடர் வலியுறுத்தல்கள் ஜெலன்ஸ்கியின் காதுகளில் விழவில்லை என்று தெரிகிறது. மேலும் அவர், நேட்டோவை இந்த பிரச்சனையில் ஈடுபடுத்தி அதன்மூலம் நேட்டோவிற்கும் ரஷியாவிற்கும் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்'.
இவ்வாறு அவர் கூறினார்.