

ஆக்லாந்து,
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றின் 2-வது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
அந்த வகையில் நியூசிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நியூசிலாந்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. இதற்கிடையில் நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் வசித்து வந்த 58 வயதுடைய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் நாடு முழுவதும் 3 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கடந்த 17 ஆம் தேதி அறிவித்தார்.
இந்த நிலையில் நியுசிலாந்தின் ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் பகுதிகளில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது நான்காம் நிலை ஊரடங்கு என்பதால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கடைகளும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.