இங்கிலாந்து விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: விமானசேவை ரத்து

இங்கிலாந்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இங்கிலாந்து விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: விமானசேவை ரத்து
Published on

லண்டன்,

இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் மாகாணத்தின் முக்கிய நகராக லூடன் விளங்குகிறது. தலைநகர் லண்டனில் இருந்து 45 கி.மீ வடக்கே அமைந்துள்ள இங்கு சர்வதேச விமானநிலையம் இயங்குகிறது. வழக்கம்போல நேற்றிரவு விமானசேவை மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது அங்குள்ள கார் நிறுத்தும் கட்டிடத்தின் 3-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த கார்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின.

சிறிதுநேரத்தில் கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து குபுகுபுவென எரிந்தது. தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் பயங்கர புகை மண்டலம் சூழ்ந்தது.

1500 கார்கள் எரிந்து நாசம்

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரின் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ரசாயனம் தெளித்தும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் 1500-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்தன. மேலும் பலமாடி கார் பார்க்கிங் கட்டிடம் தீக்கிரையானது. விமானநிலையத்திற்குள் தீ பரவுவதை தடுக்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் சாதுர்யமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் காயம்

தீயணைப்பு பணியின்போது புகைமூட்டத்தில் சிக்கியதில் மூச்சுத்திணறி 6 தீயணைப்பு வீரர்கள் மயங்கி விழுந்தனர். மேலும் தீ விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். விபத்து காரணமாக விமான நிலையம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

விமான சேவை ரத்து

மேலும் தீ விபத்து காரணமாக லூடன் விமான நிலைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. லூடன் விமானநிலையத்திற்கு வரவிருக்கும் விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது. லூடன் நகரில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. இதனால் வெளிநாட்டு பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் மீண்டும் விமானநிலையம் திறக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com