பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பாகிஸ்தானில் அரசியலமைப்பை மீறி அவசர சட்டங்களை அமல்படுத்தியதாக பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்றார்.

பாகிஸ்தானில் ஏற்கனவே பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நீடித்து வந்த சூழலில் இம்ரான்கான் பதவியேற்ற பின்னர் அங்கு நிலைமை மேலும் மோசமானது. அரசின் பல்வேறு துறைகள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

இதனால் சர்வதேச நாடுகளிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் உருவானது. அப்படி வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது.

4 ஆண்டுகளில் 54 அவசர சட்டங்கள்

இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசை பதவி விலகக்கோரி அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த நெருக்கடிகளையெல்லாம் சமாளித்து ஆட்சியை நடத்துவதற்காக இம்ரான்கான் அரசு பல்வேறு அவசர சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற அமர்வு நடைபெறாத சமயத்தில் அவசரகால சூழ்நிலைகளில் மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டிய இத்தகைய அவசர சட்டங்களை ஆட்சி நடத்துவதற்காகவே இம்ரான்கான் அரசு அடிக்கடி அமல்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த வகையில் ஆட்சியை தொடங்கிய 2018-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 54 அவசர சட்டங்களை இம்ரான்கான் அரசு அமல்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இம்ரான்கான் அரசுக்கு எதிராக அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் காசி பயீஸ் இசா மற்றும் அமினுத் தின் கான் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களை முழுமையாக கேட்டறிந்த நீதிபதிகள் அவசர சட்டங்களை பிறப்பிக்கும் விவகாரத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:-

அவசர சூழ்நிலைகளில் மட்டும்

அதிபர் மற்றும் மாகாண ஆளுநர்கள் அவசர சட்டங்களை அமல்படுத்தலாம், ஆனால் சட்டங்களை வெளியிடுவதற்கான அவர்களின் அதிகாரம் அரசியலமைப்பால் சுற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகள் இல்லாதபோது, மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும்போது மட்டுமே அவசர சட்டங்களை அமல்படுத்த முடியும்.

கூறப்பட்ட முன்நிபந்தனைகளில் ஒன்று கூட இல்லாத நிலையில், அதிபரோ அல்லது ஆளுநர்களோ அவசர சட்டங்களை வெளியிட முடியாது. அவசரமான சூழ்நிலைகளில் மட்டுமே அவசர சட்டம் அமல்படுத்தப்படலாம். ஏனெனில் அதை மட்டுமே அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.

மக்களை அவமதிக்கிறது

அரசியலமைப்பின் ஒவ்வொரு வார்த்தையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். இதைச் செய்யும்போது அது அவநம்பிக்கையை சிதறடித்து, ஆபத்துகளில் இருந்து விலகி செல்கிறது. மேலும் இது நேரம், பணம் மற்றும் உழைப்பின் விரயத்தையும் தவிர்க்கிறது. அரசியலமைப்பை மீறும் போதெல்லாம் அது யாருக்காக உருவாக்கப்பட்டதோ அந்த மக்களை அவமதிக்கிறது என்பதற்கு இத்தகைய அவசர சட்டங்கள் வரலாற்று சான்றாகும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com