ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - மலாலா வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மலாலா வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - மலாலா வலியுறுத்தல்
Published on

வாஷிங்டன்,

பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, மலாலா யூசுப்சாய் மீது தலிபான் பயங்கரவாதிகள் 2012 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பானது. தலையில் பலத்த காயமடைந்து இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மலாலா, தனது குடும்பத்தினருடன் அங்கேயே வசித்து வருகிறார்.

தனது 16-வது வயதில் கல்வியில் பாலின சமத்துவத்தின் அவசியம் குறித்து ஐநாவில் உரையாற்றிய மலாலா, தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பணியாற்றி வருகிறார். இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 17 வயதில் மலாலா இந்த விருதைப் பெற்றார். கடந்த நவம்பர் மாதம் அசர் என்பவரை மலாலா திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி பிளிங்கெனை சந்தித்து பேசிய மலாலா, ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அங்கு சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளதாகவும், பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. இருப்பினும் இதனை தலீபான்களின் அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்து பேசிய மலாலா, ஆப்கானிஸ்தானில் உள்ள பெண் குழந்தைகள் அமைதியான முறையில் வாழவும், கல்வி கற்கவும், விளையாடி மகிழவும் அவர்களுக்கு அடிப்படை உரிமை உண்டு எனவும், அதனை உறுதி செய்ய வேண்டியது சர்வதேச அரசுகளின் கடமை எனவும் தெரிவித்தார். அமெரிக்க அரசு, ஐ.நா. சபையுடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளை வழங்கிடவும், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மலாலா வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com