

டெஹ்ரான்,
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையானது ஈரான் மற்றும் ஓமான் நாடுகளின் முழுமையான கூட்டு இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என்றும், இனிவரும் காலங்களில் இந்த கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் அனைத்து சர்வதேசக் கப்பல்களுக்கும் சேவைக் கட்டணங்கள் கட்டாயமாக்கப்படும் என்றும் ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவுடனான தற்காலிகப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி போக்குவரத்துச் சுங்கக் கட்டணம் (Transit Tolls) விதிக்க முடியாது என்பதால், கப்பல்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, வழிகாட்டுதல், மீட்புப் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான "சேவைக் கட்டணம்" (Service Fees) வசூலிக்கப்படும். இதுகுறித்த புதிய விதிமுறைகள் அடங்கிய கூட்டு அறிக்கை விரைவில் ஓமானுடன் இணைந்து வெளியிடப்பட உள்ளது.
உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுவதால், ஈரானின் இந்த அதிரடி முடிவு சர்வதேச எரிசக்தி சந்தையிலும் உலக வர்த்தகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.