

பாரீஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்.ஏ.டி.எப்.) உலகெங்கிலும் பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதிகள் ஆகியோருக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த அமைப்பு பல நாடுகளில் ஆய்வுகளை நடத்தி, அதற்கேற்ப நாடுகளை வகைப்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளை கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. பாகிஸ்தான், மியான்மா, பிலிப்பைன்ஸ், சிரியா, உகாண்டா, ஏமன் உள்ளிட்ட நாடுகள் கிரே' பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலை எப்.ஏ.டி.எப். அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மறுஆய்வு செய்வது வழக்கம். பயங்கரவாத செயல்களுக்கு நிதி செல்வதை தவிர்க்க தவறியதால் கடந்த 2018-ம் ஆண்டு கிரே' பட்டியலில் வைக்கப்பட்ட பாகிஸ்தானிடம், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல் திட்டம் அளிக்கப்பட்டது. ஆனால், செயல் திட்டத்தை நிறைவேற்றாததன் காரணமாக பாகிஸ்தான் ஒவ்வொரு ஆண்டும் கிரே' பட்டியலில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டும் பாகிஸ்தானை கிரே' பட்டியலில் தக்கவைத்துள்ளதாக எப்.ஏ.டி.எப். அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-ம் ஆண்டு எப்.ஏ.டி.எப். செயல் திட்டத்தின் 27 இலக்குகளில் 26 இலக்குகளை பாகிஸ்தான் நிறைவேற்றிவிட்டது. ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது செயல் திட்டத்தில் ஓர் அம்சமாக உள்ளது. அதை பாகிஸ்தான் இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே அந்த நாடு தொடர்ந்து `கிரே' பட்டியலில் உள்ளது என கூறப்பட்டுள்ளது.