

டெல் அவிவ்
இஸ்ரேலில் அமெரிக்க விமான படையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் குவிக்கப்பட்டு உள்ளன. இதனை தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
ஈரான் நாட்டின் மீது கடந்த ஆண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அப்போது இருந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. எப்போது வேண்டுமென்றாலும் நேரடி போர் ஏற்பட கூடிய சாத்தியம் உள்ள சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா தன்னுடைய படைகளை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இடம் மாற்றி வருகிறது. இதன்படி, கத்தார் நாட்டின் அல் உதீத் படை தளத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்களை இடம் மாற்றி கொண்டு சென்றுள்ளது. இதனை அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதேபோன்று, அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள பஹ்ரைன், ஈராக், சிரியா, குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளிலும் கூட ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுதங்களின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.
அவர்கள் எல்லோரும் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். ஒருவேளை போர் ஏற்பட்டால் இந்த 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஈரானின் தாக்குதலுக்கு இலக்காக கூடும் என கூறப்படுகிறது.
அதனுடன் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அமெரிக்கா மாற்றி உள்ளது என கூறப்படுகிறது. அதனுடன் தாக்குதலில் இருந்து தப்பும் வகையில், ஈரானில் இருந்து சற்று தொலைவில் அமெரிக்காவின் 2 விமானந்தாங்கி கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
ஈரானும் பதிலடிக்கு தயாராகவே உள்ளது. அதற்கேற்ப அதன் தலைவர் காமேனி சமீபத்தில் கூட டிரம்ப்புக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடும் வகையில் பேசினார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை, ஜெனீவாவில் நாளை நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், இஸ்ரேலில் அமெரிக்காவின் போர் விமானங்கள் குவிக்கப்பட்டு உள்ளன. தெற்கு இஸ்ரேலில் உள்ள அந்நாட்டு விமான படையின் தளத்தில் இந்த நவீன ரக விமானங்கள் வந்திறங்கி உள்ளன என அமெரிக்க ஊடகங்களும் தெரிவித்து உள்ளன.
சமீபத்தில், 20-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிக அளவில் தென்படுகின்றன என்று இஸ்ரேலும் தெரிவித்து உள்ளது.