பள்ளி மீது போர் விமானம் வீசிய வெடிகுண்டு.. மாணவர்கள் 20 பேர் பரிதாப பலி

மியான்மரில் பல கிளர்ச்சி அமைப்புகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றன.
பள்ளி மீது போர் விமானம் வீசிய வெடிகுண்டு.. மாணவர்கள் 20 பேர் பரிதாப பலி
Published on

பாங்காக்,

மியான்மர் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆங் சான் சூகியின் தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. பல கிளர்ச்சி அமைப்புகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றன. இதில் 6,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய மியான்மரின் தபாயின் நகரத்தில் உள்ள கிராமத்தின் மீது நேற்று காலை 9 மணி அளவில் ராணுவத்தினர் விமானங்களில் இருந்து தாக்குதலில் இறங்கினர். அப்போது அந்த பகுதியில் இருந்த பள்ளிக்கூடம் மீது ஒரு போர் விமானம் வீசிய வெடிகுண்டு விழுந்து வெடித்தது.

இதையடுத்து தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போராட்டக்காரர்கள் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டனர். இந்த கொடூர தாக்குதலில் 20 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அருகிலுள்ள 3 வீடுகள் சேதமடைந்தன.

இதேபோன்று, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கிராமத்தின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தாக்குதலில் 160 பேர் வரை கொன்று குவித்துள்ளனர். இந்த வான்வழித் தாக்குதல் குறித்த தகவல்களை ராணுவ அரசாங்கமோ, ஊடகங்களோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com