மியான்மரில் பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு

மியான்மரில் பேஸ் புக் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

யாங்கூன்,

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மியான்மரில் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மியான்மரில் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு எம்.பி.டி உட்பட இணையதள சேவை வழங்குனர்களால், பேஸ் புக் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சகம் நாட்டின் ஸ்திரத்தன்மை பேணுவதற்காக பிப்ரவரி 7ம் தேதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.

மேலும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மக்கள், போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும், பேஸ்புக்கைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com