ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ் கைது

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நவாஸ் செரீப், அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். #NawazSharif
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ் கைது
Published on

லாகூர்,

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸை விமானத்தில் வந்து இறங்கியதும் கைது செய்ய தேசிய பொறுப்புடைமை முகமை நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி இன்று கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே நவாஸ் ஷெரீப்பையும், அவரது மகள் மரியம் நவாசையும் கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்கள் ஒதுக்கப்பட்டது. ஒன்று லாகூர் விமான நிலையத்திலும், மற்றொன்று இஸ்லாமாபாத் விமான நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர்களை ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

லாகூரில் பதற்றம்

நவாஸ் செரீப்பை கைது செய்ய பாதுகாப்பு படை திட்டமிட்ட நிலையில், லாகூரை நோக்கி அவரது கட்சியின் தொண்டர்கள் படையெடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. லாகூரில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றது. இதற்கிடையே பாதுகாப்பு படையினர் நவாஸ் செரீப் ஆதரவாளர்களை கைது செய்தார்கள், 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்த நிலையில் கூடுதல் உஷார் நிலைப்படுத்தப்பட்டது. வன்முறை சம்பவம் பதிவானதும் நவாஸ் செரீப் விமானம் இஸ்லாமாபாத் நோக்கி திருப்பி விடப்பட்டது என தகவல் வெளியாகியது. ஆனால் அவருடய விமானம் லாகூரிலே தரையிறங்கியுள்ளது.

வழக்கு விபரம்:-

பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷெரீப், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பனாமா கேட் ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியையும் இழந்தார். அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு அப்போது உத்தரவிட்டது. இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷெரீப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் அவென்பீல்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அந்த கோர்ட்டு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே லண்டன் நகரில் புற்றுநோயால் அவதியுற்று வருகிற மனைவி குல்சூம் நவாசை சந்திப்பதற்காக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாசுடன் அங்கு சென்றார். அங்கு குல்சூம் நவாஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் இன்று பாகிஸ்தான் திரும்பிய போது லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com