

தெஹ்ரான்,
அமெரிக்கா-ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதல் சுற்று அமைதி பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை கத்தாரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இரு நாட்டு குழுக்களும் கத்தாருக்கு சென்றபோதிலும் நேரடி பேச்சுவார்த்தை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஈரான் குழுவுக்கு தலைமை தாங்கும் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறியதாவது:-
அமெரிக்காவுடன் ஈரான் புதிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றும் வரை இறுதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்காது. ஏனென்றால் நாங்கள் ஒரு நண்பருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எங்களுக்கு எதிராக நிச்சயமாகச் செயல்படக்கூடிய மற்றும் நம்பகத்தன்மையற்ற ஒரு எதிரியுடன்தான் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.
எனவே போருக்குத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே சிறப்பாகப் பேச்சுவார்த்தை நடத்த முடியும். புரிந்துணர்வு ஒப்பந்த அம்சங்களை நிறைவேற்ற அமெரிக்கா தவறினால் நாங்களும் போருக்கு தயாராகவே இருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஹோர்முஸ் ஜலசந்தியில் 60 நாட்களுக்கு மட்டுமே கட்டணம் ஏதுமின்றி கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.