நியூசிலாந்தில் சிகரெட் விற்பனைக்கு நிரந்தரமாக தடை விதிக்க திட்டம்

புகைப் பழக்கத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை நியூசிலாந்து அரசு எடுத்து வருகிறது.
நியூசிலாந்தில் சிகரெட் விற்பனைக்கு நிரந்தரமாக தடை விதிக்க திட்டம்
Published on

வெலிங்டன்,

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் சுவாசக் கோளாறு, புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதில் இருந்து அவ்வளவு எளிதில் மீள முடிவதில்லை. உலகின் பல்வேறு நாடுகளிலும் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்த பல விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை சிகரெட் அட்டைகளிலும், சினிமாக்களிலும், பொது இடங்களிலும் புகைப்பிடித்தல் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை பார்க்க முடியும்.

அந்த வகையில் நியூசிலாந்தில் புகைப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிகரெட் விற்பனைக்கு நிரந்தரமாக தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சிகரெட் விற்பனையை தடை செய்வதன் மூலம் நியூசிலாந்தில் இளைஞர்கள் அவர்கள் வாழ்வில் சிகரெட்டைப் புகைத்துப் பார்க்கவே முடியாத சூழலை ஏற்படுத்தமுடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

இது குறித்து நியூசிலாந்து சுகாதாரத்துறை மந்திரி ஆயிஷா வெரால் கூறுகையில், இளைஞர்கள் ஒருபோதும் புகைபிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். எனவே புகையிலை பொருட்களை இளைஞர்களுக்கு விற்பது அல்லது வழங்குவதை சட்டவிரோத செயலாக மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே புகைப் பழக்கத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை நியூசிலாந்து அரசு எடுத்து வருகிறது. ஆனால் நடவடிக்கைகள் பலன் தருவதற்குக் காலம் பிடிக்கும் என்பதால், சிகரெட் விற்பனைக்கு நிரந்தர தடை உள்ளிட்ட கடுமையான திட்டங்களை கையில் எடுக்க நியூசிலாந்து அரசு யோசித்து வருகிறது. இந்த புதிய சட்டம் வரும் 2024 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com