அமெரிக்காவுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை; பாகிஸ்தானில் திங்கட்கிழமை நடைபெறும் - ஈரான் வட்டாரம் தகவல்

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப்பை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
அமெரிக்காவுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை; பாகிஸ்தானில் திங்கட்கிழமை நடைபெறும் - ஈரான் வட்டாரம் தகவல்
Published on

கராச்சி

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே ஈரான், அமெரிக்கா இடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது.

இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையில் ஈரானின் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி அக்பர் அகமதியன், ஈரானின் மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி ஆகியோருடன், ஈரான் நாடாளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்களும் பாகிஸ்தானுக்கு கடந்த ஞாயிற்று கிழமை சென்றனர்.

இந்த குழுவில் பாதுகாப்பு, அரசியல், ராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான பிரதிநிதிகள் இருந்தனர். அமெரிக்கா சார்பில் அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரும் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். 6 வாரங்களாக நீடித்த போரை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாகவும், அதற்கான முதல் சந்திப்பாகவும் இது அமைந்தது.

எனினும், இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் ஏறக்குறைய 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என வான்ஸ் கூறி விட்டு குழுவினருடன் நாடு திரும்பினார். இதனால், மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு உள்ளன. இந்த சூழலில், இரு நாடுகளுக்கு இடையே அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற கூடும் என ஈரான் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதற்காக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு நாளை இரு நாடுகளின் குழுவினரும் வருகை தரவுள்ளனர். இந்த புதுப்பிக்கப்பட்ட ராஜதந்திர முயற்சிகளால், மேற்காசியாவில் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதேபோன்று, கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமது அல் தானி மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஆகியோர் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து, மேற்காசிய பதற்றம் குறைவதற்கான சர்வதேச முயற்சிகள் மற்றும் தீர்வுக்கான விசயங்களை மேம்படுத்துவது பற்றி விவாதித்தனர்.

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப்பை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். நிறுத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான ராஜதந்திர முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com