

பெய்ஜிங்,
48 உறுப்பு நாடுகள் கொண்ட என்.எஸ்.ஜி. கூட்டமைப்பில் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட புதிதாக விண்ணப்பிப்பவர்கள் உறுப்பினராக முடியாது.
கடந்த வருடம் ஜூன் மாதம் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக சியோலில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்தியா போன்ற அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) சேர்க்கக்கூடாது என்பது சீனாவின் நிலைப்பாடு.
மேலும், இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளித்து உறுப்பினராக சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்றும் சீனா பிடிவாதம் காட்டியது.
சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு மேலும் 10 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தும் இந்தியாவுக்கு பலனில்லாமல் போய்விட்டது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த அம்சங்கள் ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகக் கூறி இந்தியா கையெழுத்திட மறுத்துவிட்டது. பாகிஸ்தான், இஸ்ரேல், தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இருப்பினும் இந்தியாவின் செயல்பாட்டை கருத்தில் கொண்டு அமெரிக்கா உள்பட பிற அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பு (என்எஸ்ஜி) நாடுகளும் ஆதரவை தெரிவித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அணு சக்தி விநியோக கூட்டமைப்பு (என்எஸ்ஜி) நாடுகளின் கூட்டம் ஸ்விட்சர்லாந்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அப்போது என்எஸ்ஜி-யில் இந்தியா இணைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் சீனாவின் எதிர்ப்பினால் மீண்டும் வாய்ப்பு மங்கி உள்ளது என்றே கூறலாம்.
சீன வெளியுறவுத்துறை மந்திரி செய்தித் தொடர்பாளர் ஹூவா சாங்யிங் பேசுகையில், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இணைவது தொடர்பான விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது, என கூறிஉள்ளார்.