குளிர்கால ஒலிம்பிக் நாளை துவங்க உள்ள நிலையில், வடகொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியதால் பரபரப்பு

குளிர்கால ஒலிம்பிக் நாளை துவங்க உள்ள நிலையில், வடகொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் நாளை துவங்க உள்ள நிலையில், வடகொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியதால் பரபரப்பு
Published on

சியோல்,

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகைமை நிலவி வந்தது. வட கொரியாவின் தொடர் அணு ஆயுத திட்டங்கள், ஏவுகணை திட்டங்கள் காரணமாக இரு நாடுகள் இடையே எப்போதுமே பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை (9-ந் தேதி) தொடங்கி, 25-ந் தேதி முடிகிறது. இந்த போட்டியில் வடகொரியாவும் பங்கேற்கிறது. இதற்காக தடகள வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் என 280 பேரை கொண்ட வடகொரிய குழு, நேற்று உள்ளூர் நேரப்படி காலை 9.28 மணிக்கு தென்கொரியா சென்று அடைந்தது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை துவங்க உள்ளது. இந்த சூழலில் வடகொரியா தனது ராணுவத்தின் 70-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடியுள்ளது. ராணுவ படைகள் உருவாக்கப்பட்ட தினத்தை அனுசரிக்கும் விதமாக பியாங்யாங்கில் 40 வருடங்களாக ஆண்டுதோறும் நடைபெறும் அணிவகுப்பு, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த வருடம், இன்று (பிப்.8) அணிவகுப்பு மாற்றப்பட்டுள்ளது.

"உலகில் உள்ள எந்த ஒரு நாடும் தனது ராணுவம் உருவாக்கப்பட்ட தினத்தை முக்கியமானதாக கருதி, ஆடம்பர நிகழ்ச்சிகள் மூலம் அந்நாளை கொண்டாடும். அது ஒரு வழக்கமான பாரம்பரியம் மற்றும் அடிப்படை அறிவு" என ஆளும் கட்சியின் செய்தித்தாளான நோடான் ஷின்முன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ராணுவ அணிவகுப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், ராணுவ அணிவகுப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அமெரிக்கா மற்றும் ஐநா சபை விதித்துள்ள பொருளாதார தடைகளை பலவீனப்படுத்தும் நோக்கில் வடகொரியா இதுபோன்ற இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com