டிரம்பை சந்திக்க கிம் ஜாங் அன் தயார்: வடகொரிய ஊடகம் தகவல்

டிரம்பை சந்திக்க கிம் ஜாங் அன் தயாராக இருப்பதாக வடகொரியா அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரம்பை சந்திக்க கிம் ஜாங் அன் தயார்: வடகொரிய ஊடகம் தகவல்
Published on

சியோல்,

உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றப்படும் என கிம் ஜாங் அன், டிரம்புக்கு உறுதி அளித்தார்.

இதையடுத்து, இருநாட்டு உறவில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது. வடகொரியா தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை அடியோடு நிறுத்தியது. இதற்கு கைமாறாக அமெரிக்கா தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பப்பெறவேண்டும் என வடகொரியா எதிர்பார்த்தது. ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியாது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்தது.

இந்த விவகாரம் குறித்து பேசி சுமுக தீர்வுகாண டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருநாட்டு தலைவர்கள் வியட்நாமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எதிர்பார்த்தபடி இந்த சந்திப்பு இணக்கமாக நடைபெறவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த வடகொரியா, அமெரிக்கா தனது வாக்குறுதியை (பொருளாதார தடைகளை திரும்ப பெறுவது) நிறைவேற்றாத வரையில் அணுஆயுத விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என அறிவித்தது.

இதனை கண்டிக்கும் விதமாக வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது.

இந்த நிலையில், கிம் ஜாங் அன்னுடன் 3வது முறையாக சந்திப்பு நடைபெறலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் இதனை தெரிவித்தார். அப்போது மூன் ஜே இன்னும் உடனிருந்தார்.

இந்த நிலையில், டிரம்பை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் தயாராக இருப்பதாக வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சரியான எண்ணத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முன்வருமேயானால், கிம் ஜாங் அன்னும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் நிகழாண்டு இறுதி வரை கிம் காத்திருக்க முடிவு செய்து இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com