அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு வடகொரிய தலைவர் கடிதம் - மீண்டும் சந்திப்பு நடைபெறுமா?

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு வடகொரிய தலைவர் கடிதம் எழுதியுள்ளதால், மீண்டும் சந்திப்பு நடைபெறுமா என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு வடகொரிய தலைவர் கடிதம் - மீண்டும் சந்திப்பு நடைபெறுமா?
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் முதன்முதலாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து இருவரும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். அந்த ஒப்பந்தத்தில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கு வடகொரியா உறுதி அளித்து இருந்தது.

இருப்பினும், அந்த நாடு அணு ஆயுதமற்ற பிரதேசமாக கொரிய தீபகற்ப பகுதியை மாற்றுவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ மேற்கொள்ள இருந்த பயணத்தை டிரம்ப் ரத்து செய்தார்.

இருப்பினும் வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி உருவானதின் 70-வது ஆண்டு விழாவையொட்டி நடந்த பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில், அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடம் பெறச்செய்யவில்லை. இது அமெரிக்காவுக்கு திருப்தியை அளித்தது.

இந்த நிலையில் டிரம்புக்கு கிம் ஜாங் அன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். இந்தக் கடிதத்தை தொடர்ந்து இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்புகள் கனிந்து உள்ளன.

இதுபற்றி வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், ஜனாதிபதிக்கு வட கொரிய தலைவர் எழுதிய கடிதம் இதமானது. தொடர்ந்து அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு தனது கவனத்தை செலுத்துவதில், அந்த நாடு கொண்டு உள்ள உறுதியை இந்தக் கடிதம் காட்டுகிறது. ஜனாதிபதியுடனான அடுத்த சந்திப்புக்கு நாள் குறித்து ஏற்பாடு செய்ய அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. நாங்கள் திறந்த மனதுடன் ஏற்கனவே அந்த நடவடிக்கைகளை தொடங்கி விட் டோம் என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com