துபாயில் அதிகாரிகளிடம் சிக்கினாரா? - இந்திய தொழில் அதிபர் விளக்கம்

துபாயில் அதிகாரிகளிடம் சிக்கினாரா என்பது குறித்த இந்திய தொழில் அதிபர் விளக்கம் அளித்தார்.
துபாயில் அதிகாரிகளிடம் சிக்கினாரா? - இந்திய தொழில் அதிபர் விளக்கம்
Published on

துபாய்,

துபாயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பசிபிக் கண்ட்ரோல்ஸ் சிஸ்டம்ஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து 37 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.765 கோடி) மோசடியாக கையாடல் செய்யப்பட்ட வழக்கில், இந்திய தொழில் அதிபர் சீனிவாசன் நரசிம்மனை துபாயில் விசாரணைக்காக அதிகாரிகள் பிடித்து சென்றிருப்பதாகவும், அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து துபாயில் அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

நான் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பை முடித்து கடந்த 1998-ம் ஆண்டு மத்திய கிழக்கு பகுதிக்கு முதல் முறையாக வந்தேன். கடந்த 2006-ம் ஆண்டு பசிபிக் கண்ட்ரோல்ஸ் நிறுவனத்தில் நிதி மேலாளராக பணிக்கு சேர்ந்தேன், அதன் பிறகு அந்த நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றேன். நான் அந்த நிறுவனத்தில் எந்த பங்கு மற்றும் வேறு அதிகாரத்தையும் பெறவில்லை. அந்த நிறுவனத்தில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு நான் விலகும்போது ஒரு ஊழியராகவே வெளியில் வந்தேன். பிறகு 2018-ம் ஆண்டில் மீண்டும் நான் வசிக்கும் விசாவை துபாயில் பெற்றேன். தொடர்ந்து அமீரகத்திற்கு வந்து சென்று இருக்கிறேன். எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ இந்தியாவை தவிர அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் எங்கும் சொத்துகள் இல்லை. இந்தியாவில் நானும் எனது மனைவியும் 2 நிறுவனங்களுக்கு இயக்குனர்களாக உள்ளோம். என்மீது எந்த குற்றவழக்கும் இல்லை. என்னை துபாயில் கைது செய்யவும் இல்லை. எனக்கு பயணத்தடை எதுவும் விதிக்கப்படவில்லை. என்னுடைய பாஸ்போர்ட்டை நான்தான் கையில் வைத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் என்மீது குற்றசாட்டுகளை சுமத்துகிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை என தெரிவித்துக்கொள்கிறேன். ஊடகங்களில் வந்தது போல எனக்கு சொகுசு கார், ரிசார்ட், எஸ்டேட் போன்ற எந்த சொத்துகளும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com