அய்யய்யோ மாட்டிக்கிட்டேன்: காருக்குள் சிக்கிய கரடி!

கதவு திறந்த அடுத்த நொடியே கரடி “தப்பித்தோம் பிழைத்தோம்” என்று காரில் இருந்து குதித்து, அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குள் ஓடித் தப்பியது.
அமெரிக்கா- காருக்குள் சிக்கிய கரடி
காருக்குள் சிக்கிய கரடி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் காருக்குள் சிக்கிய கரடி ஒன்று ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காருக்குள் சிக்கிய கரடி

அமெரிக்கா, கொலராடோ மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்றிலிருந்து தொடர்ந்து ஹாரன் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் பதற்றமடைந்த அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது, காருக்குள் கறுப்பு கரடி ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காருக்குள் உணவைத் தேடி நுழைந்த கரடி, எதிர்பாராதவிதமாக கதவு மூடிக்கொண்டதால் வெளியே வர முடியாமல் தவித்தது.

வினோத மீட்பு நடவடிக்கை

கரடி ஆக்ரோஷமாக இருந்ததால், கார் கதவை நேரடியாகத் திறப்பது ஆபத்தானது என உள்ளூர்வாசிகள் கருதினர். இதையடுத்து, ஒரு நபர் காரின் பின் கதவின் கைப்பிடியில் நீண்ட கயிறு ஒன்றைக் கட்டினார். பின்னர் பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டு கயிற்றை இழுத்து கதவைத் திறந்தார். கதவு திறந்த அடுத்த நொடியே கரடி “தப்பித்தோம் பிழைத்தோம்” என்று காரில் இருந்து குதித்து, அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குள் ஓடித் தப்பியது.

காரின் நிலை - எச்சரிக்கை

கரடி வெளியே வரப் போராடியதில் காரின் ஏர்பேக்குகள் வெடித்ததோடு, உட்புற இருக்கைகள் மற்றும் கதவுகள் முற்றிலும் சேதமடைந்தன. அமெரிக்காவில் கரடிகள் கார்களின் கதவுகளை எளிதாகத் திறக்கக் கற்றுக்கொண்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் கார்களை எப்போதும் பூட்டி வைக்க வேண்டும் என்றும், காருக்குள் உணவுகளை வைக்கக் கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com