

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இன்று சியாச்சின் கிளாசியர் பகுதியில் பறந்ததாக சமா டிவி செய்தி வெளியிட்டு உள்ளது.
விமானப்படை விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆனால் எல்லையை தாண்டவில்லை என இந்திய விமானப்படை தகவல்கள் தெரிவித்து உள்ளன. காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ உதவி வரும் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் ஏராளமான ராணுவ முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இந்நிலையில் பதற்றமான சியாச்சின் கிளாசியர் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது.
பாகிஸ்தான் விமானப்படை தளபதி மார்சல் சோகில் சுகார்து விமானப்படை தளத்திற்கு வந்து பார்வையிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் தெரியவந்து உள்ளது.
காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில் வடக்கு பனிப்பாறை செக்டரில் சியாச்சின் சிகரம் உள்ளது. 19 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதி, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் இமயமலை அருகே அமைந்துள்ளது. சியாச்சின் பகுதியை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருவதால் தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது. சியாச்சினில் இதுவரையில் பனிச்சரிவில் சிக்கி பாகிஸ்தான் வீரர்களே அதிகமாக உயிரிழந்து உள்ளனர். பாகிஸ்தான் தொடர்ச்சியாக இந்தியா ராணுவத்தை திரும்பபெற வேண்டும் (நீலி கண்ணீர் வடிக்கிறது) என்று கூறிவருகிறது. இதுவரையில் தனது ராணுவத்தை பாகிஸ்தான் திரும்ப பெற எந்தஒரு நடவடிக்கையும் எடுத்தது கிடையாது.