பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: பாகிஸ்தான் கண்டனம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: பாகிஸ்தான் கண்டனம்
Published on

இஸ்லமாபாத்,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸ் விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 17 பேர் இறந்து விட்டதால், 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தினசரி விசாரணை நடந்து வந்தது. 350 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த லக்னோ சி.பி.ஐ. கோர்ட், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இது குறித்து கூறும் போது, வரலாற்று சிறப்பு வாய்ந்த மசூதியை இடித்தவர்களை விடுவித்தது வெட்கக்கேடானது. சிறுபான்மையினர்கள் நலனையும் அவர்களின் வழிபாட்டு தலங்களையும் பாதுகாப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை பாகிஸ்தானின் உள்ள ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com