

இஸ்லமாபாத்,
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவை உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறிய பாகிஸ்தான், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பிரச்சினயை சர்வதேச நீதிமன்றத்துக்கு இந்தியா எடுத்துச்சென்றது. அங்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கிடையில், பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை சந்திப்பதற்கு அனுமதி கோரி அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. குல்பூஷண் ஜாதவை அவரது தாயாரும், மனைவியும், இஸ்லாமாபாதில், வரும் 25-ஆம் தேதி சந்திக்க அனுமதிப்பதற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் முடிவு செய்தது.
அதைத் தொடர்ந்து, குல்பூஷண் ஜாதவின் குடும்பத்தினருக்கு விசா வழங்குமாறு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது, ஜாதவ் குடும்பத்தினருக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும். அந்தச் சந்திப்பின்போது, இந்தியத் தூதரக அதிகாரி ஒருவருக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.