போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பாக்.மதத்தலைவருடன் இம்ரான்கான் அரசு பேச்சுவார்த்தை

பாகிஸ்தானில் இம்ரான்கான் பதவி விலக வலியுறுத்தி 5-வது நாளாக மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் தலைமையிலான குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பாக்.மதத்தலைவருடன் இம்ரான்கான் அரசு பேச்சுவார்த்தை
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமரான பின்னர் அவரது தலைமையிலான ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் தவறான அரசுமுறை நிர்வாகம் ஆகியவற்றால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகி வருவதாகவும் பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்து இம்ரான் கானின் கட்சி ஆட்சியை கைப்பற்றி விட்டதாகவும் அந்நாட்டின் பிரபல மதத்தைலைவரான ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் பஸ்ல் இயக்கத்தின் தலைவரான மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

பாகிஸ்தானை இம்ரான்கான் ஆட்சியின் பிடியில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி சிந்து மாகாணத்தின் தெற்கு பகுதியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி மாபெரும் பேரணி ஒன்றை மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் தொடங்கினார். இஸ்லாமாபாத் வரை பேரணியாக ஆதரவாளர்கள் புடைசூழ திரண்டு வந்தார். இம்ரான்கான் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடப் போவது இல்லை என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் போராட்டத்திற்கு பாகிஸ்தானில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 5-வது நாளாக நீடித்து வரும் இந்த போராட்டம், இம்ரான்கானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, அரசுக்கு ஆதரவான இரண்டு குழுக்கள் மதகுரு ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கைகள் பற்றியும் முன்னாள் பிரதமர் சவுத்ரி சுஜாத் ஹூசைன் தலைமையிலான ஒரு குழுவும், பாதுகாப்புத்துறை மந்திரி பெர்வய்ஸ் கத்தாக் தலைமையிலான ஒரு குழுவும் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான எந்த சமிக்ஞையும் தென்படவில்லை. கத்தாக் குழுவினர் மீண்டும் மதகுரு தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனக்கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com