இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? இம்ரானுக்கு பாக். எதிர்க்கட்சிகள் கண்டனம்

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? என இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? இம்ரானுக்கு பாக். எதிர்க்கட்சிகள் கண்டனம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பியதைத் தொடர்ந்து இந்தியபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகள் அடுத்த வாரம் நியூயார்க் நகரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதுபற்றிய அறிவிப்பு வெளியான மறுதினமே பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் 3 போலீசாரை கடத்திச்சென்று சுட்டுக் கொன்றனர். இதனால் இந்திய அரசு உடனடியாக நியூயார்க் நகரில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மாற்றத்தையும் இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியையும் ஏற்படுத்த உதவக் கூடிய நல்லதொரு பேச்சுவார்த்தையை மீண்டும் ஒரு முறை இந்தியா வீணடித்து விட்டது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு அதிருப்தி அளிக்கிறது. பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட 24 மணி நேரத்தில் அதை ரத்து செய்து இருப்பதற்கு இந்தியா கூறும் காரணமும் ஏற்புடையது அல்ல என்று தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இணக்கமாக செயல்பட்டால் மோடிக்கு அது பாதகமாக அமையும் என்பதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது என பாகிஸ்தான் நாளிதழான டான் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? என இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அவசரமான நகர்வு என அந்நாட்டு இருபெரிய எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் விமர்சனம் செய்துள்ளன. "ராஜதந்திர தோல்வி"க்கு இம்ரான்கான்தான் பொறுப்பு என்று கூறியுள்ள அக்கட்சிகள், பேச்சுவார்த்தையை நாடுவதற்கு முன்னதாக வீட்டுப் பாடத்தை முடிக்கவேண்டும் என கூறியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com